ஆகஸ்ட் 26 : முதல் வாசகம்
உன்னைக் காக்கும் பொறுப்பினை உடைய ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே.
ரூத்து நூலிலிருந்து வாசகம் 2: 1-3, 8-11; 4: 13-17
நகோமிக்குப் போவாசு என்ற உறவினர் ஒருவர் இருந்தார். அவர் செல்வமும் செல்வாக்கும் உடையவர்; எலிமலேக்கின் வழியில் உறவானவர். ரூத்து நகோமியிடம், “நான் வயலுக்குப் போய், யார் என்னைக் கருணைக் கண்கொண்டு நோக்குவாரோ, அவர் பின்னே சென்று கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். எனக்கு அனுமதி தாரும்” என்றார். அவரும், “போய் வா, மகளே” என்றார். ரூத்து ஒரு வயலுக்குப் போய், அறுவடையாள்கள் பின்னால் சென்று, அவர்கள் சிந்திய கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். தற்செயலாக, அவர் போயிருந்த அந்த வயல் எலிமலேக்கிற்கு உறவினரான போவாசுக்கு உரியதாய் இருந்தது.
பிறகு, போவாசு ரூத்தை நோக்கி, “பெண்ணே, நான் சொல்வதைக் கேள். இந்த வயலைத் தவிர வேறு எந்த வயலுக்கும் போய் நீ கதிர் பொறுக்க வேண்டாம். என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு. அறுவடையாளர்கள் வேலை செய்யும் இடத்தை நன்றாகக் கவனித்து, அங்கே போய் அவர்கள் பின்னால் கதிர்பொறுக்கும் பெண்களோடு நீயும் இரு. எந்த வேலைக்காரனும் உனக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதென நான் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால், அவர்கள் நிரப்பி வைத்துள்ள பாண்டங்களிலிருந்து தண்ணீர் அருந்திக்கொள்” என்றார்.
ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, “என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண்கொண்டு நோக்குகிறீர்? அயல் நாட்டுப் பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்?” என்று கேட்டார்.
போவாசு, “உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்” என்றார்.
இவ்வாறு போவாசு தாம் சொன்னபடியே ரூத்தைத் தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று, அவரை மணந்துகொண்டார். அவர்கள் கூடி வாழ்ந்தபோது, அவர் கருத்தரிக்க ஆண்டவர் அருள்கூர்ந்தார். ரூத்து ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார்.
ஊர்ப் பெண்கள் நகோமியைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பெயர் போற்றி! போற்றி! உன்னைக் காக்கும் பொறுப்பினை உடையான் ஒருவனை அவர்தாம் அருளியுள்ளாரே; இஸ்ரயேலில் அவனது பெயரும் புகழுடன் ஓங்கித் திகழுவதாக! புதுவாழ்வு உனக்கு அன்னவன் தருவான்; முதுமையில் உனக்கு அன்னமும் அளிப்பான்; உன்பால் கொண்ட அன்பால், உனக்கு மைந்தர் எழுவரின் மேலாய் விளங்கும், மருமகள் அவனை ஈன்றவள் அன்றோ!” என்று வாழ்த்தினார்கள். நகோமி குழந்தையைக் கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டார். அவரே அதைப் பேணி வளர்க்கும் தாயானார்.
சுற்றுப்புறப் பெண்கள். “நகோமிக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்” என்று சொல்லி, அவனுக்கு ‘ஓபேது’ என்று பெயரிட்டார்கள், அவனே தாவீதின் தந்தையான ஈசாயின் தந்தை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment