செப்டம்பர் 7 : முதல் வாசகம்
கடவுளே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 9-14
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நாள்முதல் உங்களுக்காகத் தவறாமல் இறைவனிடம் வேண்டி இவ்வாறு அவரிடம் கேட்டுக் கொள்கிறோம்: நீங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடையவேண்டும். நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் பயன் தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் வளரவேண்டும். நீங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் உங்களுக்கு வலுவூட்ட வேண்டும். மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவ மன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment