சனவரி 23 : முதல் வாசகம்
தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6: 12b-15, 17-19
அந்நாள்களில்
தாவீது புறப்பட்டுச் சென்று கடவுளின் பேழையை ஓபேது - ஏதோமின் இல்லத்திலிருந்து தாவீதின் நகருக்கு அக்களிப்போடு கொண்டு வந்தார். ஆண்டவரின் பேழையை ஏந்தியவர்கள் ஆறு அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு காளையையும் ஓர் ஆட்டுக் கிடாயையும் பலியிட்டார். நார்ப் பட்டால் நெய்யப்பட்ட ஏபோத்தை அணிந்துகொண்டு, தாவீது தம் முழு வலிமையோடு ஆண்டவர் முன்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள்.
ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து, அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார். எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தியபின் தாவீது படைகளின் ஆண்டவர் பெயரால் மக்களுக்கு ஆசி வழங்கினார். பிறகு தாவீது ஆண் முதல் பெண் வரை மக்கள் அனைவருக்கும் இஸ்ரயேல் கூட்டம் முழுவதற்கும் ஆளுக்கொரு அப்பத்தையும், பொரித்த இறைச்சியையும், திராட்சைப் பழ அடையையும் கொடுத்தார். மக்கள் அனைவரும் தம் இல்லங்களுக்குச் சென்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment