பிப்ரவரி 6 : முதல் வாசகம்
“மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.”
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23, 27-30
அந்நாள்களில்
சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்றுகொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி மன்றாடியது:
“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.
கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்! ‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!
உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment