மார்ச் 30 : பாஸ்கா திருவிழிப்பு
ஏழாம் வாசகம்
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 36: 16-17a, 18-28
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து ‘இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று’ என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச்சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 42: 2, 4abc; 43: 3, 4 (பல்லவி: 42: 1)
பல்லவி: கடவுளே! என் நெஞ்சம் கலைமான் போல உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.
42:2
என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
4abc
மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! - பல்லவி
43:3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி
4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி
No comments:
Post a Comment