மார்ச் 30 : பாஸ்கா திருவிழிப்பு
ஆறாம் வாசகம்
ஆண்டவரின் ஒளியில் சீர்மையை நோக்கி நட.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 32- 4: 4
இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களோடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்?
ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, “இதோ, உள்ளோம்” என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின.
இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர். மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம் அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.
யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட. உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68)
பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி
10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி
No comments:
Post a Comment