ஏப்ரல் 17 : முதல் வாசகம்
தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8
அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.
சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment