செப்டம்பர் 29 : முதல் வாசகம்
அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29
அந்நாள்களில்
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.
ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்” என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment