செப்டம்பர் 29 : நற்செய்தி வாசகம்
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48
அக்காலத்தில்
யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment