செப்டம்பர் 3 : முதல் வாசகம்
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 10b-16
சகோதரர் சகோதரிகளே,
தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார். ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. “ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?” நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment