ஆகஸ்ட் 26 : முதல் வாசகம்
கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்.
சகோதரர் சகோதரிகளே! நாங்கள் உங்களிடம் வந்த நோக்கம் வீணாகவில்லை என்பது உங்களுக்கே தெரியும். உங்களிடம் வருமுன்பே பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம், இழிவாக நடத்தப்பட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பெரும் எதிர்ப்புக்கிடையில் கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம்.
எங்கள் அறிவுரைகள் தவற்றையோ, கெட்ட எண்ணத்தையோ, வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. நாங்கள் தகுதி உடையவர்கள் எனக் கருதி, நற்செய்தியைக் கடவுளே எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப, நாங்கள் பேசுகிறோம். மனிதர்களுக்கு அல்ல, எங்கள் இதயங்களைச் சோதித்தறியும் கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம். நாங்கள் என்றும் போலியாக உங்களைப் புகழ்ந்ததே இல்லை. இது உங்களுக்குத் தெரிந்ததே. போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை, இதற்குக் கடவுளே சாட்சி. கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்துகொண்டோம்.
இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக