அக்டோபர் 4 : முதல் வாசகம்
ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.
இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29
இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்.
கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன்.
ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார்.
கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment