22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி
முதல் வாசகம்
இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 8: 6-13
சகோதரர் சகோதரிகளே, சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிடச் சிறப்புமிக்கது. முதல் உடன்படிக்கை குறையற்றதாய் இருந்திருப்பின், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடமே இருந்திருக்காது. ஆனால், கடவுள் அவர்களது குற்றத்தை எடுத்துக் கூறிச் சொன்னது இதுவே: ``இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன்'' என்கிறார் ஆண்டவர். `எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய மூதாதையரைக் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. ஏனெனில், நான் அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள்; நானும் அவர்கள்மீது அக்கறை கொள்ளவில்லை' என்கிறார் ஆண்டவர். `அந்நாள்களுக்குப் பின் இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்' என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் `ஆண்டவரை அறிந்துகொள்ளும்' எனத் தம் அடுத்தவருக்கோ, சகோதரர் சகோதரிகளுக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில், அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர். அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்து விடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்.' ``புதியதோர் உடன்படிக்கை'' என்பதால், முன்னையதை அவர் பழையதாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைய வேண்டியதே.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
No comments:
Post a Comment