ஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்
சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காக இறக்கப் போகிறார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 45-57
அக்காலத்தில்
மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர். ஆனால் அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர். தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்துகொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்? இவனை இப்படியே விட்டு விட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!” என்று பேசிக்கொண்டனர். கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று சொன்னார்.
இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காகவும், தம் இனத்திற்காக மட்டுமன்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.
அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழ இருந்தது. விழாவுக்கு முன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். “அவர் திருவிழாவுக்கு வரவேமாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். ஏனெனில் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.