ஆகஸ்ட் 8 : நற்செய்தி வாசகம்
நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-36.
அக்காலத்தில்
இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.
இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார்.
அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர்.
அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.