ஆகஸ்ட் 21 : நற்செய்தி வாசகம்
நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 16-22
அக்காலத்தில்
செல்வரான இளைஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நன்மையைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.
அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.
அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.