ஆகஸ்ட் 7 : நற்செய்தி வாசகம்
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 14-20
அக்காலத்தில்
இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் இயேசுவை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு, “ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டு வந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை” என்றார். அதற்கு இயேசு, “நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்று கூறினார். கொண்டு வந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே, அது அவனை விட்டு வெளியேறியது. அந்நேரமே சிறுவன் குணமடைந்தான். பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால், அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.