ஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்
தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில்
திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.