மே 22 : நற்செய்தி வாசகம்
யோவான் இவற்றை எழுதி வைத்தார். இவரது சான்று உண்மையானது.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 20-25
அக்காலத்தில்
பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்?” என்று கேட்டவர். அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்டார். இயேசு அவரிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.
ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்கமாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?” என்றுதான் கூறினார்.
இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும். இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு