ஜூன் 6 : நற்செய்தி வாசகம்
இவரே உம் மகன்! இவரே உம் தாய்!
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-34
அக்காலத்தில்
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
ஆண்டவரின் அருள்வாக்கு.