டிசம்பர் 2 : நற்செய்தி வாசகம்
கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-11
அக்காலத்தில்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.
இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.” என்றார்
ஆண்டவரின் அருள்வாக்கு.