சனவரி 25 : திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழா
முதல் வாசகம்
எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22: 3-16
அந்நாள்களில்
பவுல் மக்களை நோக்கிக் கூறியது: “நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்; ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்; கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்; நீங்கள் அனைவரும் இன்று கடவுள்மீது ஆர்வம் கொண்டுள்ளதுபோன்று நானும் கொண்டிருந்தேன். கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையில் அடைத்தேன்; சாகும்வரை அவர்களைத் துன்புறுத்தினேன். தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன்.
நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழ்ந்து வீசியது. நான் தரையில் விழுந்தேன். அப்போது, ‘சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்ற குரலைக் கேட்டேன். அப்போது நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்டேன். அவர், ‘நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே’ என்றார்.
என்னோடு இருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்; ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.
‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?’ என நான் கேட்க, ஆண்டவர் என்னை நோக்கி, ‘நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல். நீ செய்வதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்’ என்றார்.
அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை. என்னோடு இருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத் தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.
அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்துக் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்; அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர். அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, ‘சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்’ என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.
அப்போது அவர், ‘நம் மூதாதையரின் கடவுள் தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும் தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும் அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும். இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.