அக்டோபர் 2 : நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.