மார்ச் 8 : நற்செய்தி வாசகம்
நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.”
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.