பிப்ரவரி 24 : நற்செய்தி வாசகம்
உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.