மார்ச் 20 : இரண்டாம் வாசகம்
எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22
சகோதரர் சகோதரிகளே,
உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.
ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் “எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். “உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். “அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 84: 4
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அல்லேலூயா.