டிசம்பர் 16 : நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவான் ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யும் தூதர்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30
யோவானிடமிருந்து வந்த தூதர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப் பற்றிப் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த ஒரு மனிதரையா? பளிச்சிடும் ஆடை அணிந்து செல்வச் செழிப்பில் வாழ்வோர் அரச மாளிகைகளில் அல்லவா இருக்கின்றனர்! பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
‘இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’ என இவரைப் பற்றித்தான் மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
திரண்டிருந்த மக்கள் அனைவரும் வரிதண்டுவோரும் இதைக் கேட்டு, கடவுளுடைய நீதிநெறியை ஏற்று யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றனர். ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.