பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்
தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45
ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.