ஜூலை 11 : நற்செய்தி வாசகம்
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38
அக்காலத்தில்
பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.