நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்
தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1, 7-11
அக்காலத்தில்
ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:
“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.
தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.