சனவரி 5 : நற்செய்தி வாசகம்
இயேசு கடல்மீது நடப்பதைக் கண்டனர்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 45-52
ஐயாயிரம் பேர் உணவு உண்ட பின் இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடு இருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.
ஏனெனில் அப்பங்கள் பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப் போயிருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.