பிப்ரவரி 5 : முதல் வாசகம்
உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13
அந்நாள்களில்
சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ‘ஏத்தானிம்’ மாதத்தின் பண்டிகையின்போது, அரசர் சாலமோன் முன் கூடினர். இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர். ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர்.
அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர். பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர். அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன. இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை.
இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று. அம்மேகத் தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று.
அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.