சனவரி 29 : நற்செய்தி வாசகம்
தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-20
அக்காலத்தில்
இயேசுவும் அவர் சீடரும் கடலுக்கு அக்கரையில் இருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகை விட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால் கூடக் கட்டிவைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு, ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார். அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்', ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாம் என்று அவரை வருந்தி வேண்டினார்.
அங்கே மலைப் பகுதியில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடுகூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
.