மார்ச் 19 : நற்செய்தி வாசகம்
அவர் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-41
அக்காலத்தில்
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்றார்.
இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.
அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர். சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர், “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார். அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ‘சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது” என்றார். “அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், “எனக்குத் தெரியாது” என்றார்.
முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டி வந்தார்கள். இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள். எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர், “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார். பரிசேயருள் சிலர். “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக்கொண்டனர். ஆனால் வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” எனக் கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர்.
அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. “பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள். அவருடைய பெற்றோர் மறுமொழியாக, “இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவியிலேயே பார்வையற்றவன்தான். ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன்தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.
யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். அதனால் அவருடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.
பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், “உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்” என்றனர். பார்வை பெற்றவர் மறுமொழியாக, “அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்: நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார். அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒருவேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார். அவர்கள் அவரைப் பழித்து, “நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள். அதற்கு அவர், “இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்று உடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவிசாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.
யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.
அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
.