ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்
ஆயத்தமாய் இருங்கள். நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 42-51
அக்காலத்தில்
இயேசு தம் சீடரிடம் கூறியது: “விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.
தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தம் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, தன் உடன்பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளிவேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.