*🕯️நற்செய்தி வாசகம்*
_ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்._
*📖மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18*
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*
No comments:
Post a Comment