செப்டம்பர் 1 : முதல் வாசகம்
உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் நற்செய்தி உங்களை வந்தடைந்தது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8.
கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் சகோதரர் சகோதரிகளாகிய கொலோசை நகர இறைமக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாய் இருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
உங்களுக்காக நாங்கள் வேண்டும்பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர் நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்குப் பற்றி அறிந்துகொண்டீர்கள். உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப் பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது. எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர். தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர்தாம் எங்களிடம் எடுத்துரைத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment