அக்டோபர் 18 : முதல் வாசகம்
என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17
அன்பிற்குரியவரே,
விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன். நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா.
கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன்.
நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக. நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.