நவம்பர் 5 : முதல் வாசகம்
நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.
இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 1: 14b- 2: 1-2, 8-10
“நானே மாவேந்தர்” என்கிறார் படைகளின் ஆண்டவர். “இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கெனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்” என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.
“நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச் செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கி விட்டீர்கள்” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்."
நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
ஆண்டவரின் அருள்வாக்கு.