Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, April 6, 2025

ஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.

ஏப்ரல் 7 :  பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 4ab)

பல்லவி: இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், நான் எதற்கும் அஞ்சிடேன்.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

எசே 33: 11

‘தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பமன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர்.

ஏப்ரல் 7 : முதல் வாசகம்குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62

ஏப்ரல் 7 :  முதல் வாசகம்

குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ) 2: 1-9, 15-17, 19-30, 33-62
அந்நாள்களில்

பாபிலோனில் யோவாக்கிம் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சூசன்னாவை மணந்தார். சூசன்னா கில்கியாவின் மகள்; அவர் பேரழகி; ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர். அவர் பெற்றோர் நேர்மையாளராய் இருந்ததால், தங்கள் மகளை மோசே சட்டத்தின் வழியில் பயிற்றுவித்தனர். யோவாக்கிம் பெரும் செல்வர். அவரது வீட்டுக்கு அருகிலேயே அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. யூதர்கள் அவரிடம் வருவது வழக்கம்; ஏனெனில் மற்ற எல்லாரையும்விட அவர் மிகவும் மதிக்கப் பெற்றார்.

அக்காலத்தில் மக்களுள் முதியோர் இருவர் நடுவராய் நியமிக்கப் பெற்றனர். இவர்களைப் பற்றியே ஆண்டவர், ‘‘நடுவர்களாய் இருந்து மக்களை வழிநடத்தவேண்டிய மூப்பர்கள் வாயிலாகப் பாபிலோனினின்று ஒழுக்கக்கேடு வந்துற்றது” என்று சொல்லியிருந்தார். இவர்கள் யோவாக்கிம் வீட்டில் நெடுநேரம் இருப்பது வழக்கம். வழக்குடையோர் அனைவரும் இவர்களை அணுகுவதுண்டு. நண்பகல் வேளையில் மக்கள் சென்றபின், சூசன்னா தம் கணவரின் தோட்டத்திற்குள் சென்று உலாவு வார். அவர் நாள்தோறும் அங்குச் சென்று உலாவுவதைப் பார்த்து வந்த அந்த முதியோர் இருவரும் அவரைக் காமுறத் தொடங்கினர். இதனால் அவர்கள் தங்கள் மனத்தைத் தகாத வழியில் செலவிட்டார்கள். விண்ணக இறைவனை நினையாதவாறும் நீதித் தீர்ப்புகளைக் கருதாதவாறும் அவர்கள் நெறி மாறிச் சென்றார்கள்.

அதற்கு ஏற்றதொரு நாளை அவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள். ஒரு நாள் சூசன்னா வழக்கம்போல் இரண்டு பணிப்பெண்களோடு மட்டும் தோட்டத்தினுள் நுழைந்து, குளிக்க விரும்பினார்; ஏனெனில், அன்று வெயில் கடுமையாக இருந்தது. அந்த முதியோர் இருவரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அவர்களோ ஒளிந்திருந்து சூசன்னாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூசன்னா பணிப் பெண்களிடம், ‘‘நான் குளிக்க எண்ணெயும் நறுமணப் பொருள்களும் கொண்டு வாருங்கள்; பிறகு தோட்டத்தின் வாயில்களை மூடிவிடுங்கள்” என்று சொன்னார்.

பணிப்பெண்கள் வெளியேறியதும் முதியோர் இருவரும் எழுந்து சூசன்னாவிடம் ஓடோடிச் சென்றனர். அவரை நோக்கி, ‘‘இதோ! தோட்டத்தின் வாயில்கள் மூடப்பட்டுள்ளன. யாரும் நம்மைப் பார்க்க முடியாது. நாங்கள் உன்மேல் வேட்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு இணங்கி எங்களோடு படு. இல்லாவிடில், ஓர் இளைஞன் உன்னோடு இருந்தான் என்றும், அதற்காகவே நீ பணிப்பெண்களை வெளியே அனுப்பிவிட்டாய் என்றும் உனக்கு எதிராக நாங்கள் சான்று கூறுவோம்” என்றார்கள். சூசன்னா பெருமூச்சு விட்டு, ‘‘நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் உங்களுக்கு இணங்கினால், எனக்குக் கிடைப்பது சாவு; இணங்காவிட்டால் நான் உங்களிடமிருந்து தப்ப முடியாது. ஆனால் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்வதை விட, அதைச் செய்யாமல் உங்களிடம் மாட்டிக்கொள்வதே மேல்” என்றார். பின் சூசன்னா உரத்த குரலில் கத்தினார். உடனே முதியோர் இருவரும் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். அவர்களுள் ஒருவர் ஓடிப்போய்த் தோட்டத்துக் கதவுகளைத் திறந்தார். தோட்டத்தில் கூச்சல் கேட்டதும், சூசன்னாவுக்கு என்ன நிகழ்ந்ததோ என்று அறிய அவர் வீட்டில் இருந்தோர் ஓரக் கதவு வழியே ஓடிவந்தனர். ஆனால் முதியோர் தங்கள் கட்டுக் கதையைச் சொன்னபொழுது, பணியாளர் பெரிதும் நாணங்கொண்டனர்; ஏனெனில் சூசன்னாவைப் பற்றி இது போன்ற எதையும் அவர்கள் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை.

மறுநாள் சூசன்னாவுடைய கணவர் யோவாக்கிம் வீட்டில் மக்கள் திரண்டு வந்தார்கள். சூசன்னாவைக் கொல்லும் தீய நோக்குடன் அந்த முதியோர் இருவரும் சேர்ந்து வந்திருந்தனர். அவர்கள் மக்கள் முன்னிலையில், ‘‘கில்கியா மகளும் யோவாக்கிம் மனைவியுமான சூசன்னாவை இங்கு அழைத்து வருமாறு ஆள் அனுப்புங்கள்” என்று கட்டளையிட்டார்கள். உடனே அவரை அழைத்து வர ஆள் அனுப்பினர். சூசன்னா வந்தார். அவரோடு அவருடைய பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எல்லாரும் வந்தனர்.

அவருடைய உற்றார் உறவினரும், அவரைப் பார்த்தவர் அனைவருமே அழுதுகொண்டிருந்தார்கள். முதியோர் இருவரும் மக்கள் நடுவே எழுந்து நின்று, சூசன்னா தலைமீது தங்கள் கைகளை வைத்தனர். அவரோ அழுதுகொண்டே விண்ணக இறைவனை நோக்கினார்; ஏனெனில் அவர் உள்ளம் ஆண்டவரை நம்பியிருந்தது. அப்பொழுது முதியோர் பின்வருமாறு கூறினர்: ‘‘நாங்கள் தோட்டத்தில் தனியாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, இவள் இரு பணிப்பெண்களோடு உள்ளே வந்தாள்; தோட்டத்து வாயில்களை மூடியபின், பணிப் பெண்களை வெளியே அனுப்பி விட்டாள். பின்னர் அங்கே ஒளிந்துகொண்டிருந்த ஓர் இளைஞன் இவளிடம் வந்து இவளோடு படுத்தான். நாங்களோ தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்தோம்; இந்த நெறிகெட்ட செயலைக் கண்டதும் அவர்களிடம் ஓடிச் சென்றோம். அவர்கள் சேர்ந்திருந்ததைப் பார்த்தோம். ஆனால் அந்த இளைஞனை எங்களால் பிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவன் எங்களை விட வலிமை மிக்கவன். எனவே அவன் கதவைத் திறந்து வெளியே ஓடிவிட்டான். நாங்கள் இவளைப் பிடித்து, அந்த இளைஞன் யார் என்று கேட்டோம். இவளோ எங்களுக்கு மறுமொழி கூற மறுத்துவிட்டாள். இவற்றுக்கு நாங்களே சாட்சி". அவர்கள் மக்களுள் மூப்பர்களாகவும் நடுவர்களாகவும் இருந்ததால், மக்கள் கூட்டம் அவர்கள் சொன்னதை நம்பி சூசன்னாவுக்குச் சாவுத் தீர்ப்பிட்டது.

அப்பொழுது சூசன்னா உரத்த குரலில் கதறி, ‘‘என்றுமுள்ள இறைவா, மறைவானவற்றை நீர் அறிகிறீர். நிகழுமுன்பே எல்லாம் உமக்குத் தெரியும். இவர்கள் எனக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியுள்ளனர் என்பதும் உமக்குத் தெரியும். இவர்கள் என்மீது சாட்டிய குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே!” என்று சொன்னார். ஆண்டவர் சூசன்னாவுடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்தார்.

கொல்லப்படுமாறு அவர் நடத்திச் செல்லப்பட்டபொழுது, தானியேல் என்னும் பெயருடைய இளைஞரிடம் தூய ஆவியைக் கடவுள் தூண்டி விட்டார். தானியேல் உரத்த குரலில், ‘‘இவருடைய இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை” என்று கத்தினார். மக்கள் அனைவரும் அவர்பால் திரும்பி, ‘‘நீர் என்ன சொல்கிறீர்?” என்று வினவினர். அவரோ அவர்கள் நடுவே நின்றுகொண்டு பின்வருமாறு சொன்னார்: ‘‘இஸ்ரயேல் மக்களே, வழக்கை ஆராயாமலும், உண்மையை அறிந்துகொள்ளாமலும் இஸ்ரயேல் மகள் ஒருத்தியைத் தீர்ப்பிடத் துணிந்துவிட்டீர்களே! அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா? நீதி வழங்கும் இடத்திற்குத் திரும்பிப் போங்கள்; இம்மனிதர்கள் இவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.

எனவே மக்கள் எல்லாரும் விரைவாகத் திரும்பி வந்தார்கள். மற்ற மூப்பர்கள் தானியேலிடம், ‘‘நீர் வந்து, எங்கள் நடுவே அமர்ந்து, எங்களுக்கு விரிவாய் விளக்கிக் காட்டும்; ஏனெனில் மூப்பருக்குரிய சிறப்பை கடவுள் உமக்கு அளித்துள்ளார்” என்று வேண்டிக்கொண்டார்கள். அப்பொழுது தானியேல், ‘‘இவர்களைத் தனித்தனியே பிரித்துத் தொலையில் வையுங்கள். நான் இவர்களை வினவுவேன்” என்றார். எனவே அவர்கள் இருவரையும் தனித்தனியே பிரித்து வைத்தார்கள். அப்பொழுது தானியேல் அவர்களுள் ஒருவரை அழைத்து, ‘‘தீச்செயலில் விளைந்தவனே! நீ முன்பு செய்த பாவங்கள் இப்பொழுது வெளியாகிவிட்டன. ‘‘மாசற்றவர்களையும் நீதிமான்களையும் சாவுக்கு உள்ளாக்காதே” என்று ஆண்டவர் சொல்லியிருந்தும் நீ முறைகேடாகத் தீர்ப்புகள் வழங்கி, மாசற்றவர்களைத் தண்டித்து, குற்றவாளிகளை விடுவித்துள்ளாய். இதோ! நீ உண்மையிலேயே சூசன்னாவைப் பார்த்திருந்தால், எந்த மரத்தடியில் அவர்கள் கூடியிருக்கக் கண்டாய், சொல்” என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘விளா மரத்தடியில்” என்றார். அதற்குத் தானியேல், ‘‘நீ நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் கடவுளின் தூதர் ஏற்கெனவே இறைவனிடமிருந்து தீர்ப்பைப் பெற்றுவிட்டார். அவர் உன்னை இரண்டாக வெட்டிப் பிளப்பார்” என்றார்.

பின் அவரை அனுப்பிவிட்டு மற்றவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவரை நோக்கி, ‘‘நீ யூதாவுக்கல்ல, கானானுக்குப் பிறந்தவன். அழகு உன்னை மயக்கிவிட்டது; காமம் உன்னை நெறிதவறச் செய்து விட்டது. நீங்கள் இருவரும் இஸ்ரயேல் மகளிரை இவ்வாறே நடத்தி வந்திருக் கிறீர்கள். அவர்களும் அச்சத்தால் உங்களுக்கு இணங்கிவந்திருக்கிறார்கள். ஆனால் யூதாவின் மகளாகிய இவரால் உங்கள் தீச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதோ! எந்த மரத்தடியில் சேர்ந்திருக்கும்பொழுது நீ இவர்களைப் பிடித்தாய்? சொல்” என்றார். அவரோ, ‘‘கருவாலி மரத்தடியில்” என்றார். தானியேல் அவரிடம், ‘‘நீயும் நன்றாகப் பொய் சொல்கிறாய். அது உன் தலைமேலேயே விழும். ஏனெனில் உன்னை இரு கூறாக வெட்டவும், இவ்வாறு உங்கள் இருவரையும் அழித்தொழிக்கவும் கடவுளின் தூதர் வாளுடன் காத்துக்கொண்டிருக்கிறார்” என்றார்.

உடனே மக்கள் கூட்டம் முழுவதும் உரத்த குரல் எழுப்பி, தம்மில் நம்பிக்கை வைப்போருக்கு மீட்பளிக்கும் கடவுளைப் போற்றியது. அவர்கள் அந்த முதியோர் இருவருக்கும் எதிராக எழுந்தார்கள்; ஏனெனில் அவர்கள் பொய்ச் சான்று சொன்னதை அவர்கள் வாய்மொழியாகவே தானியேல் மெய்ப்பித்திருந்தார். அம்முதியோர் பிறருக்குச் செய்ய இருந்த தீங்கை அவர்களுக்கே மக்கள் செய்தார்கள். மோசே சட்டப்படி அவர்களைக் கொன்றார்கள். இவ்வாறு மாசற்ற சூசன்னா அன்று காப்பாற்றப்பட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Saturday, April 5, 2025

ஏப்ரல் 6 : நற்செய்தி வாசகம்உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11

ஏப்ரல் 6 :  நற்செய்தி வாசகம்

உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-11
அக்காலத்தில்

இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, ‘‘போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள்.

இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ‘‘உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.

இயேசு நிமிர்ந்து பார்த்து, ‘‘அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார். அவர், ‘‘இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம், ‘‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஏப்ரல் 6 : இரண்டாம் வாசகம்கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

ஏப்ரல் 6 :   இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்; சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14
சகோதரர் சகோதரிகளே,

உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவன் ஆக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின்மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவே 2: 12-13

இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், என்கிறார் ஆண்டவர்.

ஏப்ரல் 6 : பதிலுரைப் பாடல்திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்

ஏப்ரல் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி

ஏப்ரல் 6 : முதல் வாசகம்இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21

ஏப்ரல் 6 :  முதல் வாசகம்

இதோ நாம் புதியன செய்கிறோம். நம் மக்களின் தாகம் தீர்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 43: 16-21
கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர் நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:

முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

April 6th : Gospel 'Let the one among you who has not sinned be the first to throw a stone' A Reading from the Holy Gospel according to St.John 8: 1-11

 April 6th :  Gospel 

'Let the one among you who has not sinned be the first to throw a stone'

A Reading from the Holy Gospel according to St.John 8: 1-11 

Jesus went to the Mount of Olives. At daybreak he appeared in the Temple again; and as all the people came to him, he sat down and began to teach them.

  The scribes and Pharisees brought a woman along who had been caught committing adultery; and making her stand there in full view of everybody, they said to Jesus, ‘Master, this woman was caught in the very act of committing adultery, and Moses has ordered us in the Law to condemn women like this to death by stoning. What have you to say?’ They asked him this as a test, looking for something to use against him. But Jesus bent down and started writing on the ground with his finger. As they persisted with their question, he looked up and said, ‘If there is one of you who has not sinned, let him be the first to throw a stone at her.’ Then he bent down and wrote on the ground again. When they heard this they went away one by one, beginning with the eldest, until Jesus was left alone with the woman, who remained standing there. He looked up and said, ‘Woman, where are they? Has no one condemned you?’ ‘No one, sir’ she replied. ‘Neither do I condemn you,’ said Jesus ‘go away, and do not sin any more.’

The Word of the Lord.