Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, October 4, 2025

நற்செய்தி வாசகம் கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்... ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

 நற்செய்தி வாசகம்

கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...

 லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10


அக்காலத்தில்

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ‘நீர் உடனே வந்து உணவருந்த அமரும்’ என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்’ என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் வாசகம் நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை. திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

 இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

அன்பிற்குரியவரே,



உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.


கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.


ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b) பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

 பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.


1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! - பல்லவி

8
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

பொதுக்காலம் 27ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர். இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3, 2: 2-4

 பொதுக்காலம் 27ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3, 2: 2-4



ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?

நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.


ஆண்டவரின் அருள்வாக்கு.

Friday, October 3, 2025

அக்டோபர் 4 : நற்செய்தி வாசகம் உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

 அக்டோபர் 4 :  நற்செய்தி வாசகம்

உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24


அக்காலத்தில்

அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன” என்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்” என்றார்.

அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 4 : பதிலுரைப் பாடல் திபா 69: 32-34. 35-36 (பல்லவி: 33a) பல்லவி: ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.

 அக்டோபர் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 69: 32-34. 35-36 (பல்லவி: 33a)


பல்லவி: ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.

32

எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.

33

ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.

34

வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். - பல்லவி

35

கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

36

ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

அக்டோபர் 4 : முதல் வாசகம் ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார். இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

 அக்டோபர் 4 : முதல் வாசகம்

ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29


இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்.

கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: ``சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார்.

கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.''

ஆண்டவரின் அருள்வாக்கு.