Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, October 4, 2023

அக்டோபர் 5 : நற்செய்தி வாசகம்நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்டோபர் 5 :  நற்செய்தி வாசகம்

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில்

இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 5 : பதிலுரைப் பாடல்திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.

அக்டோபர் 5 :  பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விப்பவை.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா!

 காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

அக்டோபர் 5 : முதல் வாசகம்திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4a, 5-6, 7b-12

அக்டோபர் 5 :  முதல் வாசகம்

திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 8: 1-4a, 5-6, 7b-12
அந்நாள்களில்

மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர். அவ்வாறே ஏழாம் மாதம் முதல் நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் காலை முதல் நண்பகல் வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர்.

திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மரமேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்!ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.

ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக் கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.

அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.

எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாய் இருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள். எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து கொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Tuesday, October 3, 2023

அக்டோபர் 4 : நற்செய்தி வாசகம்நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62

அக்டோபர் 4 :  நற்செய்தி வாசகம்

நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62
அக்காலத்தில்

இயேசு சீடர்களோடு வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார். அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார். இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

அக்டோபர் 4 : பதிலுரைப் பாடல்திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6ac)பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.

அக்டோபர் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 137: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 6ac)

பல்லவி: உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.
1
பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
2
அங்கிருந்த அலரிச் செடிகள்மீது எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். - பல்லவி

3
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‘சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர். - பல்லவி

4
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! - பல்லவி

6
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக் கொள்வதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!

 கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

அக்டோபர் 4 : முதல் வாசகம்உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8

அக்டோபர் 4 :   முதல் வாசகம்

உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.

நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8
மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.

மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார்.

நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.

அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன்.

அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.

மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன்.

கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 4th : Gospel 'I will follow you wherever you go'A reading from the Holy Gospel according to St.Luke 9:57-62

October 4th :  Gospel 

'I will follow you wherever you go'

A reading from the Holy Gospel according to St.Luke 9:57-62 
As Jesus and his disciples travelled along they met a man on the road who said to him, ‘I will follow you wherever you go.’ Jesus answered, ‘Foxes have holes and the birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.’
  Another to whom he said, ‘Follow me’, replied, ‘Let me go and bury my father first.’ But he answered, ‘Leave the dead to bury their dead; your duty is to go and spread the news of the kingdom of God.’
  Another said, ‘I will follow you, sir, but first let me go and say goodbye to my people at home.’ Jesus said to him, ‘Once the hand is laid on the plough, no one who looks back is fit for the kingdom of God.’

The Word of the Lord.