அக்டோபர் 4 : முதல் வாசகம்
உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்.
நெகேமியா நூலிலிருந்து வாசகம் 2: 1-8
மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நெகேமியாவாகிய நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.
மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மன வேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார்.
நானோ மிகவும் அஞ்சினேன். நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டிருக்கும்போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.
அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன். நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால், என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன்.
அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால், திரும்பி வரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.
மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும் வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும். கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்க இருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன்.
கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment