🍃19/12/2020, திருவருகைக் காலம் டிசம்பர்
முதல் வாசகம்
சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது.
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசகம் 13: 2-7, 24-25
அந்நாள்களில் சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், "நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில் பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென `நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்'' என்றார். அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: "கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. அவர் என்னிடம். `இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில் பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்' என்றார்.'' அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போதுதான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
No comments:
Post a Comment