Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, February 12, 2021

பிப்ரவரி 13 : முதல் வாசகம்கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24

பிப்ரவரி 13 :   முதல் வாசகம்

கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24
அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.

ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். அவர் பெண்ணிடம், “உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்” என்றார்.

அவர் மனிதனிடம், “உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக் கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.

மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய். ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். பின்பு ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர்போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.

எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

No comments:

Post a Comment