20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி
முதல் வாசகம்
பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14
ஆண்டவர் கூறுவது:
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.
உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.
ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும் ‘ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
____
No comments:
Post a Comment