25 பிப்ரவரி 2021, தவக்காலம் முதல் வாரம் - வியாழன்
முதல் வாசகம்
"ஆண்டவரே, உன்னைத் தவிர வேறு எந்த உதவியும் எனக்கு இல்லை"
எஸ்தர் நூலிலிருந்து வாசகம் எஸ் (கி) 4: 17k-m, r-t
சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார். இந்நிலையில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை அவர் பின்வருமாறு மன்றாடினார். “என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன். ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும், நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும், நான் பிறந்த நாள்தொட்டு என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்; எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும். தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே, அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே, எனக்குத் துணிவைத் தாரும். சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்; எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்; இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.
ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்; ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
____
No comments:
Post a Comment