ஏப்ரல் 12 :
முதல் வாசகம்
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31
அந்நாள்களில்
விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்:
“ஆண்டவரே, ‘விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’ என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர்.
இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும்.”
இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment