மே 16 : இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், ‘அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’ என்று மறைநூல் கூறுகிறது.
‘ஏறிச் சென்றார்’ என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.
அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 28: 19-20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
No comments:
Post a Comment