ஜூன் 10 : முதல் வாசகம்
கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15- 4: 1, 3-6
சகோதரர் சகோதரிகளே,
இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும் போதெல்லாம் அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது. ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும். இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது. ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு. இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சி பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.
கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம். நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது. எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காண முடிவதில்லை.
நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே. “இருளிலிருந்து ஒளி தோன்றுக!” என்று சொன்ன கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment